ஜனவெல்லம்

பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளி சென்று திரும்புகையில், என்றுமில்லாமல் அன்று வெள்ளம் போல் ஜனங்கள் என்னை நோக்கி  வந்தனர். ஏன் ஏதற்கு என்று தெறியாமலும், மிதிவண்டியை ஓட்ட முடியாமலும் கிழே இறங்கி எதர்நடை போட்டேன். சுமார் 2 கிமீ தூரம் ஆச்சு, கூட்டமும் குறைந்தது, திரும்பவும் மிதிவண்டியில் ஏறி வீடு நோக்கி செலுத்தினேன்.

வீடு வந்த பின்பு தான் தெறிந்தது, அன்று ரேக்ளா ரேஸ் நடந்ததாக அம்மா சொன்னார்கள். நாங்கள் ஒரு சில மாதங்கள் முன்பு தான் அங்கு புதிதாக என் அப்பா கட்டிய வீட்டிற்கு குடி பெயர்ந்தோம். பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் அனைவரும் ரேக்ளா ரேஸ் பத்தி சொல்ல சொல்ல எனக்கும் அதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கூடிக் கொண்டே போனது. “நாளைக்கும் இருக்கு நீ பார்க்களாம்என்று பக்கத்து விட்டு அத்தை சொன்னது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

காத்திருப்பு

இரவு முழுவதும் எப்போ விடியம் என்று சரியாகவே உறங்கவில்லை. கடிகாரமுள் 6 தொட்டதும் மணி அடித்தது. அன்று வார விடுமுறை. படுக்கையிலிருந்து துள்ளி குதித்து வெளியே சென்றேன். அம்மா வாசலில் அழகான கோலம் போட்டிருந்தாள், அதை மிதிக்காமல் தாண்டி சென்று பார்த்தேன், மக்கள் சிறு சிறு கூட்டமாக  சாலையின் இருபுறமும் சேர ஆரம்பித்தனர். விருவிருவென்று வீட்டிற்குள் சென்று பல் துலக்கி , அம்மா தந்த காபியை குடித்து, உடை மாற்றி சாலையை நோக்கி ஓடினேன். 

வண்டி பந்தயம்

இன்னும் சிறிது நேரம் இருப்பதாக  அங்கே இருந்தவர்கள் பேச்சின் முலம் தெரிந்து கொண்டேன். நேரம் ஆக ஆக எனக்கு வண்டி மாடு எப்போ வரும் என்று நொடிக்கொரு தடவை சாலையை எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படி ஒர்முறை பார்க்கையில், சரேல் என சீறிக்கொண்டு இரண்டு காளைகள் பூட்டிய வண்டி தார்சாலை தேயப் பாய்ந்து சென்றது. அதனை தொடர்ந்து சுமார் 50 வண்டிகளாவது சென்றிருக்கும். தட தட வென்று மாட்டின் குளம்பு சத்தமும், கட கட வென்று சாலையில் வண்டிகள் ஓடும் சத்தம் காதில் ஒரு சங்கீதம் போல் ஒலித்தது. ஒவ்வொன்றும் ஒர் விதம். சிகப்பு, வெள்ளை, கறுப்பு, சாம்பல் என பலவித வண்ணங்களில் மாடுகள் சிங்கம் போல் பாய, வெவ்வேறு வண்ணங்களில் வண்ணப்பூச்சு செய்யப்பட்ட வண்டிகளும் சிங்கத்தின் வால் போல் மாடுகளின் பின்னால் பாய்ந்து சென்றது மிகவும் அழகாக  இருந்தன. பரிசுகளை வெல்வதற்கு வண்டி மாடுகளை அதன் உரிமையாளர்கள் விரட்டிக் கொண்டிருந்தனர்.  ஹேய் ஹேய் என்ற சத்ததிற்கு காளைகள் பாய்ந்தனவா , இல்லை சாட்டை அடிக்குப் பயந்து பாய்ந்தனவா என்று தெரியவில்லை. 

அனைத்து வண்டிகளும் என்னை தாண்டி சென்றதும் அதுவரை அமைதியாக இருந்த மக்கள், அந்த மாட்டு வண்டி தான் முதலில் வரும், இல்லை இதுதான் முதலில் வரும் என்று ஒவ்வொருவரும் தங்கள் கணிப்பு பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கோ போன வண்டி எப்போ திரும்பும் என்று காத்திருந்தேன். ஜனகக்குரலை கிழித்து கொண்டு சாம்பல் நிற காளை பூட்டப்பட்ட சிகப்பு நிற வண்டி வந்ததும், மறுபடியும் அனைவருக்கும் ஆரவாரம் தொத்திக்கொண்டது. என்னை தாண்டி அது செல்கையில் அது பரிசு வாங்கி சந்தோசம் அடைந்ததா என்று தெரியவில்லை, ஆனால் முதல் முறையாக ரேக்ளா ரேஸ் பார்த்த எனக்கு பரிசுகள் பல வாங்கிய சந்தோசம். 

அந்த சந்தோஷத்துடன் வீடு திரும்பினேன்.

மாணிக்க மீனாட்சி அன்பழகன்
Picture Credit : By எஸ்ஸார் – சொந்த முயற்சி, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=17631266