ரவியும் ராதாவும் காதல் மணம் புரிந்த இளம் தம்பதிகள். ரவிக்கு கோயில் செல்லும் பழக்கம் இல்லை. ராதா அபிராமியை வணங்காமல் தன் நாளை துவக்குவது இல்லை. ரவி மிகவும் நிதானம். ராதா எதிலும் வேகம். ரவி பொறுமை. ராதா பட்டாசு. சட்டென்று கோபப்படுவாள். ரவியின் ஜோக்கை கேட்டு களுக்கென சிரிப்பாள். கோபம் நொடியில் பஞ்சாய் பறந்து விடும்.ராதாவுக்கு இளகிய மனம். குழந்தை உள்ளம். ரவி அவளை தன் மகளை போல் காத்தான். இவர்களின் வாழ்க்கை தென்றல் போல இதமாய் நகர்ந்தது.
திருமணம் முடிந்து 3 வருடத்துக்கு பின் ராதா கருவுற்றாள். இருவரும் மகிழ்ந்தனர். குழந்தைக்கான பொம்மைகள், தொட்டில், உடை, கர்ப்பகாலம் பற்றிய புத்தகங்கள் என ஷாப்பிங் பட்டியல் தலைகீழாய் மாறியது. அன்று காலை டாக்டரை பார்க்க இருவரும் கிளம்பினர். ஸ்கேன் பரிசோதனை முடிந்தது. டாக்டர் கரு வளரவில்லை, கலைந்துவிட்டது என்றார். ரவியின் கண்கள் கலங்கின. ‘டாக்டர். நாங்க ஏதாவது தப்பு பண்ணிட்டோமா?’ என மெல்லிய குரலில் வினவினான். ‘இல்லை. முதல் trimesterல் 20% கரு கலைவது நார்மல். கவலை வேண்டாம். நீங்கள் சீக்கிரம் மறுபடியும் கருதரிப்பீர்கள்‘ என்று ஆறுதல் சொன்னார். ராதாவின் மனம் அதிர்ச்சியில் உறைந்து போனது.
ஒரு வார விடுப்புக்கு பின் அவள் வழக்கம் போல் அலுவலகம் சென்றாள்.ஆனால் பழைய உற்சாகம் அவளிடம் இல்லை. அன்று ஞாயிற்றுக்கிழமை.ராதா சோபாவில் அமர்ந்து டிவியில் மனம் லயிக்காமல் சேனல் மாற்றிக்கொண்டே இருந்தாள். ரவி அவள் அருகே அமர்ந்து, அவள் உள்ளங்கையை வருடியபடி, “டார்லிங், நம்ம லீவு போட்டு கோயில் ட்ரிப் போகலாமா?” என்றான். ராதாவுக்கு ஆச்சர்யம். கோயில், பூசை என்றால் ஓடி ஒளியும் என் ரவியா இது என மலைத்தாள். உடனே உற்சாகமாய், ‘கும்பகோணம் போகலாமா?’ என்றாள். இருவரும் காரில் கும்பகோணம் கிளம்பினர். ஒரு 3 நட்சத்திர ஓட்டலில் தங்கினர். ஒப்பிலியப்பன்,திருவாஞ்சியம், கல்பரக்ஷாம்பிகை என ராதா பட்டியல் வைத்து தரிசனம் செய்தாள். ஒரு மதிய வேளை. ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.
சாப்பிட்டு முடித்ததும் மேசையில் இருந்து எழும் போது ஒரு சிறுவன் அவர்கள் சாப்பிட்ட இலையை எடுத்தான். ராதா, ‘ரவி, சின்ன பிள்ளை இலை எடுக்குது ! ‘ என பதறினாள். பால் மணம் மாறாத அச்சிறுவனின் முகத்தையும்,கண்ணீர் கன்னங்களில் வழிய நின்ற ராதாவையும் ரவி மாறி மாறி பார்த்தான்.உடனே சுதாரித்து, ‘வா டார்லிங், போகலாம்‘ என அவள் கையை பிடித்தான்.அவள், ‘ ரவி, வெயிட் , அவன் கையிலே டிப்ஸ் கொடுத்துட்டு வர்றேன்‘என்றாள். ரவி, ‘வேண்டாம். நீ கொடுக்கும் 50 ரூபாயால் அவன் அடிபடுவான்.அவனிடம் இருந்து பிடுங்குவார்கள்‘ என்று சற்று அழுத்தமாக அவள் கையை பிடித்து வெளியேறினான்.
அவள் வாயடைத்து செய்வது அறியாமல் அவனுடன் காருக்கு திரும்பினாள்.அவள் முகம் வாடி இருந்தது. ‘நான் அந்த பையன் ஸ்கூலுக்கு போக ஏற்பாடு செய்கிறேன். வழக்கம் போல் நீ மழலையர் இல்லத்துக்கு பணம் அனுப்பும் போது 500 ரூபாய் சேர்த்து அனுப்பும்மா‘ என்றான் ரவி. ராதாவின் முகம் திருப்தியில் மலர்ந்தது. சற்று நேரத்தில் உறங்கி போனாள்.
குழந்தையான ராதா சட்டென தாய் ஆனதை உணர்ந்த ரவி நிச்சயம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் ஊர் திரும்பினான்.
சில மாதங்களுக்கு பின் ஓர் நாள் ரவி, ‘அந்த கும்பகோணம் பையன் பெயர் ஜெசு. அப்பா இல்லை. அவன் அம்மாவுக்கு வருமானத்துக்கு தையல் மெஷின் வாங்கி கொடுத்திருக்கேன். கார்மெண்ட்ஸ் கடையில் வேலை பார்த்தது போக,வீட்டில் தைத்து சம்பாதிப்பார். ஜெசு ஸ்கூலுக்கு போறான். சந்தோஷமா டார்லிங் ?’ என்றான். அவள் முகமலர்ந்து‘தாங்கியூ ரவி. உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ!’ என ஒரு பேப்பரை நீட்டினாள். படித்ததும் அவளை அள்ளி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான். கர்ப்ப பரிசோதனை ரிப்போர்ட் அது.
படம் : Blessed Virgin Mary & Child by Philip Kosloski with creative commons license
மனதில் நிற்கும் சிறுகதை. தெளிவான கதையோட்டம். வாழ்த்துக்கள்.
தாய்மைக்கு அருமையான கதை. தாய்மை என்பது நிலையே அன்றி நிகழ்வு இல்லை.