வீடு கிரகபிரவேசம் முடிந்ததும், சில மாதங்களில் தைப்பொங்கல் திருநாள் வத்தது. இந்த தைப்பொங்கல் வீட்டிற்கு தலை பொங்கலாதலால், அப்பா மற்றும் அம்மா சிறப்பான எற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.  கடைக்கு சென்று இனிப்பு மற்றும் வெண் பொங்கல் தயாரிக்க புதிதாக இரண்டு பித்தளை பானை வாங்கினர். இரண்டும் இருவேறு அளவுகளில் அழகாக இருந்தது. அதற்கு ஏற்றார் போல் இரண்டு இரும்பு அடுப்புகளையும், கிளறுவதற்கு ஏற்றார் போல் கரண்டிகளையும் வாங்கி வந்தனர்.

அதோடு மட்டுமல்லாமல், பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, பாசிப்பருப்பு,  மண்டை வெல்லம், பசும்நெய், முந்திரி பருப்பு, ஏலக்காய்; சாமிக்கு வைத்து படைக்க வாழை இலை, தேங்காய், வாழைப்பழம், கதம்பம், மல்லிகைபூ, சூடம், பத்தி, சாம்பிராணி , சந்தனம் என்று இரண்டு பைகளில் பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினர்.

வீடு வந்ததும்,

அம்மா: “ஏங்க கரும்பு இன்னும் வாங்களைஎன்றதும்,

அப்பா: “ சரி போய் வாங்கி வரேன்என்று கிளம்பினார்.

அப்பா என்னிடம்வரியா கடைக்கு என்றதும் “, துள்ளி குதித்து சென்று இருசக்கர வாகனத்தின் பின்னால் ஏறி அமர்ந்தேன்.

கரும்பு வாங்க சந்தை  வந்ததும் வண்டியை ஓரமாக நிருத்திவிட்டு, கடையை நோக்கி நடந்தோம். எங்கு பார்த்தாலும் பொங்கல் ஆரவாரம் தெரிந்தது. கட்டு கட்டாக கரும்பு கடை வாசல் சுவற்றில் சாத்தி வைத்திருத்தனர். அவர்களிடம் பேரம் பேசி, கணுக்கள்  இடையே பெரிதாக இருந்த ஐந்து கரும்புகளை வாங்கினோம், கூடவே மஞ்சள் கொத்தும் வாங்கி வண்டியில் வைத்துக் கட்டி வீடு வந்து சேர்ந்தோம்.

இரவு உணவு முடித்தவுடன், அப்பாவும் நானும், வாங்கி வந்த கரும்பு, மஞ்சள் வாசலில் நிலைபடியில் சேர்த்து கட்டும் போது, அம்மா பொங்கல் வைபதற்கு தேவையான பொருட்களைஅளந்து எடுத்து வைத்து கொண்டிருந்தார்.  அந்த வேலைகள் முடிந்ததும், அம்மாசீக்கிரம் தூங்கங்க அப்பதான் காலைல சீக்கிரம் எந்திரிங்க முடியும்என்று சொன்னதும் , ஒருவர் பின் ஒருவராக உறங்க ஆரம்பித்தோம்.

பொங்கலன்று அதிகாலை சூரியன் உதிக்குமுன், அனைவரும் எழுந்து, பொங்கல் வைக்க தயாரானோம். அப்பா தான் எங்கள் வீட்டில் பொங்கல் வைப்பார். அம்மா வாசலில் கோலமிட்டதும், புதிதாக வாங்கி வந்த இரும்பு அடுப்பில் தோட்டத்தில் கிடைத்த பெரிய கம்புகளை வைத்து,அடுப்பை பத்த வைத்து , பின்பு பித்தளை பொங்கல் பானை அதில் வைத்து நன்கு சூடேற்றினார்.

பானை நன்றாக சுடேறயதும், சிறிதளவு கல் உப்பு பானையில் போட்டு, குவளையிலருந்த பாலை அதில் ஊற்றினார். “சொர்ர்ர்…” என்ற சத்தம் பானை நன்கு சூடாக இருப்பது தெரிந்தது. அதில் அரிசி அலசிய தண்ணீர் அம்மா தந்ததும் பானையில் ஊற்றி, அது கொதிப்பதற்கு அடுப்பை நன்கு மூட்டினார். நெருப்பு தக  தகவென்று எரிய, பானையில் விளும்பில் நுரைத்து கொண்டு வந்தது . சூரியனும் மெல்ல மெல்ல மேல வந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில், பால் கிழக்கே நோக்கி பொங்க, சூரியனுக்கு நன்றி சொல்லுவது போல இருந்தது. வழக்கம் போல் அனைவரும் அரிசி போட, சிறிது நேரத்தில் வெந்ததும், வெள்ளம் சேர்த்து நன்கு கிண்டி இறக்கி வைத்தார்கள். மற்றும்  வெண்பொங்கல் , அத்துடன் சேர்த்து சாப்பிட  காய்கறி மண்டியும் அம்மா வைத்து முடித்திருந்தார்.

அனைத்தையும் வாழை இலையில் வைத்து, தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி சாமிக்கு வைத்து படைத்து பின்பு அனைவரும் உண்டு மகிழ்ந்தோம்.

-மாணிக்க மீனாட்சி அன்பழகன்