காலையில் கணேஷ் பரபரப்பாக பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்தான். ‘அப்பா, இன்னிக்கு சாயந்தரம் ஆண்டுவிழா. நான் டான்ஸ் ஆடுறேன். நீ நிச்சயம் வரணும் ‘, என்றான். ஏழு வயது கணேஷின் கொஞ்சல் குரலில் அப்பா மயங்கி, ‘நிச்சயம் வரேன் கண்ணே ‘, என்றார்.

போன முறை தான் போகாததை நினைவு கூர்ந்தார். டாட்டா சொல்லிவிட்டு அம்மாவுடன் பள்ளிக்கு ஸ்கூட்டியில் பறந்தான்.

அப்பா அலுவலகத்தில் தன்னை மறந்தார். மதிய நேரம் சாப்பிட்டதும் அலைபேசியை கவனித்தார். ஆண்டு விழா பற்றி மனைவி அனுப்பிய ரீமைண்டர் இருந்தது. சங்கடத்தை போன ஆண்டு தவிர்த்தேன், இந்த முறை முடியாது என எண்ணியபடி தன் இருக்கைக்கு சென்றார். சற்று நேரத்தில் வேலையில் முழ்கினார்.

ஐந்து மணி ஆனதும் கடிகாரம் ஒலிக்கவே, அவசரமாய் கோப்பை மூடிவிட்டு பள்ளிக்கு கிளம்பினார். பள்ளி வளாகம் அலங்கார தோரணங்கள், கூச்சல், கூட்டம் என விழா கோலம் கொண்டிருந்தது. குழந்தைகள் பல வண்ண உடையில் இங்கும் அங்கும் ஓடி கொண்டிருந்தனர். கூட்டத்தில் எங்கே கணேஷ் என அவர் கண்கள் அலைபாய்ந்தது. கணேஷ் அவரை கண்டுகொண்டான். அருகில் நின்ற ஆசிரியையிடம் அவரை காண்பித்தான். ‘உன் தாத்தாவா?’ என ஆசிரியர் வினவினார். ‘இல்லை, அப்பா என கூறிவிட்டு அவன் அவரை நோக்கி ஓடி வந்தான்.

ஆசிரியர் கேட்ட வினா அப்பாவின் காதில் விழ, அவரின் முகம் வாடியது. ஒரே செல்ல மகன் கணேஷ், ஐம்பது வயதில் அவருக்கு பிறந்தான்.

 

படம்: Women in Agriculture by ICRISAT with license