காட்சி – 1
ரமேஷும் கணேஷும் நண்பர்கள் . ரமேஷ் பாரிஸில் வேலை பார்க்கிறான். கணேஷ் பெங்களூரில். ஞாயிற்று கிழமை இரவு 10 மணி. வழக்கம் போல் ரமேஷ் போனில் அழைத்தான்.
‘மச்சான், எப்படி இருக்கே ? போன வாரம் எப்படி போச்சு ?’
கணேஷ் அலைபேசியில் ஹெட்செட் இணைத்து படுக்கையில் சரிந்து, ‘மச்சி, எல்லாம் வழக்கம் போலவே‘ சலிப்புடன் ஆரம்பித்தான். ‘ஆபீஸ் போனேன். போரிங் டா. டீமில் ஒரு பிகர் கூட இல்லை. சனிக்கிழமை ஜிம் போனேன். இன்று மதியம் ஐநாக்ஸில் சினிமா பார்த்தேன். வாரம் முடிந்தது. வாழ்க்கைனா ஒரு த்ரில் வேணும் டா . சுவாரஸ்யமே இல்லாமல் இது என்னடா லைஃப் ? உனக்கு எப்படி ?’ என்றான் .
ரமேஷ் உற்சாகமாக, ‘மச்சி , அந்த எதிர் பிளாட் பிகர் இப்போ பேசுது. அடுத்த வாரம் காபிக்கு அழைக்க போறேன்.’ என்றான்.
‘வாவ், சூப்பர் மச்சான்! என்ஜாய் டா‘ வாழ்த்தினான் கணேஷ்.
காட்சி – 2
அன்று வெள்ளிக்கிழமை. அலுவலகம் விட்டு கிளம்பும் முன் ஒரு ஈமெயில் வந்தது. ‘திங்கள் கிழமையில் இருந்து வீட்டில் இருந்தே வேலை செய்க. ஆபீஸ் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.’
கணேஷ் பரபரப்பாக வெளியேறினான். லிப்ட்டில் அருகில் நின்ற சீனியரிடம் என்ன ஆச்சு என வினவினான். அவர் பதட்டமாக தெரிவித்தார். ‘என் பிள்ளைகள் ஸ்கூலில் இருந்து போன் வந்தது, அவர்களை அழைத்து போக சொல்லி. இனி மறு அறிவிப்பு வரும் வரை ஸ்கூல் இல்லையாம்.’
தன் மனைவி செல்விக்கு அலைபேசியில் அழைத்து அவளும் குழந்தைகளும் வீடு திரும்பியதை உறுதி செய்தான்.
பதட்டம் தொற்ற தன் ryder ஐ கிளப்பி வீட்டுக்கு பறந்தான். வழி எங்கும் பதட்டமான முகங்கள். முதியவர்கள் விரைந்து பேருந்துக்குள் ஏற முடியாமல் திணறினர்.இளையவர்கள் முந்தினர்.
கணேஷ் சிக்னலில் விசாரித்தான். ‘இன்று 10 மணிக்கு மேல் பஸ் ஓடாது‘ என்றான் இளையவன் ஒருவன்.
ஒரு வழியாய் வீட்டை அடைந்தான். செல்வி அவனை கண்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
‘கணேஷ், கடைக்கு போய் சீக்கிரம் இந்த லிஸ்டில் இருப்பதை வாங்கிட்டு வா. கடை 9 மணிக்கு மூடிடும்‘ என்றாள்.
கடைக்கு விரைந்தான் கணேஷ். கூட்டம் அலை மோதியது. அவன் மலைத்து நின்றான்.
நேரம் ஆகவே செல்வி போன் செய்து, ‘வாங்கின வரைக்கும் போதும். சீக்கிரம் வீட்டுக்கு வா. வெளியே நின்றால் போலீஸ் அடிக்கும்‘ என பதறினாள். அவன் வீட்டுக்கு விரைந்தான்.
காட்சி – 3
ஞாயிற்று கிழமை இரவு வழமை போல் ரமேஷ் அழைத்தான். ‘கணேஷ், எப்படி போச்சு இந்த வாரம்?’ என்றான்.
‘மச்சான். எல்லாம் தலைகீழ். நான் ஒரு வாரமாக ஆபீஸ் போகலை. வீட்டில் இருந்து வேலை. செல்வியும் வீட்டில் இருந்து வேலை. குழந்தைகளுக்கு ஸ்கூல் இல்லை. கடைகள் இல்லை. சனிக்கிழமை ஜிம் போகலை. இன்னிக்கு சினிமா பார்க்கலை. வெளியே போக தடை. 144. சண்டே ஸ்பெஷல் பிரியாணி இல்லை.வெறும் ரசம், அப்பளம். யார் வீட்டுக்கும் போக முடியலை. யாரையும் சந்திக்கமால் ஒரே போர். தாங்க முடியலை. ‘
‘எப்படா நார்மல் ஆகும் ?’ வருத்தத்துடன் ரமேஷ் கேட்டான்.
‘தெரியலை மச்சி ‘
‘மச்சான், இங்கே அறிவிப்பு இப்போ தான் வந்தது. இங்கேயும் நாளையில் இருந்து இதேதான் .’
காட்சி – 4
புதன்கிழமை இரவு ரமேஷ் அழைத்தான்.
‘என்ன மச்சி, இன்னிக்கு கூப்பிட்ட ?’ என்றான் கணேஷ்.
‘சாரி மச்சி . எங்கேயும் போகாமல், யாரோடயும் பேசாமல் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்குடா . கொஞ்ச நேரம் பேசு மச்சி . ‘
காட்சி – 5
சில வாரங்களுக்கு பின்.
கணேஷும் ரமேஷும் காணொளியில் அலைபேசியில் இணைந்து நெடுநேரம் கதைத்தனர்.
‘மச்சி. லைப் எவ்ளோ ஸ்மூத்தா இருந்துச்சு, ஏதோ வைரஸ் வந்து எல்லாத்தையும் தலைகீழ் ஆக்கிடுச்சு. மாமாவுக்கு டயாலிசிஸ்க்கு ஹாஸ்பிடல் போக முடியல.எதிர் வீட்டு பொண்ணுக்கு பிரசவம் வீட்டிலேயே நடந்துச்சு.
ஆபீஸ் நண்பர்களோடு காபி சாப்பிட்டு அரட்டை அடிக்க முடியலை. சனிக்கிழமை haircut பண்ண முடியலை.
குழந்தைகள் பார்க்கில் விளையாடாமல் வீட்டுக்குள் எப்போதும் அடைஞ்சு இருக்காங்க.
பாப்பா பிறந்த நாள் அடுத்த வாரம் வருது. யாரையும் அழைக்க முடியலை. கோயில் போக முடியலை.
நம்ம சதீஷ் கல்யாணம் வீட்டிலே அமைதியா நடந்தது. பார்ட்டி இல்லை. அவன் ஹனிமூன் பிளான் நடக்கலை. மொரீசியஸ் கனவு பலிக்கலை. பாவம் டா, அப்செட் ஆயிட்டான்.
எங்க வீட்டு வேலைக்காரம்மா வேலைக்கு வரலை. மக்கள் அவதிபடுறாங்க.
அமைதியான வாழ்க்கை. அருமை தெரியாமல் ….. இப்போ நார்மல் ரொட்டின்க்கு தவம் பண்ணுறோம் எல்லோரும்‘.
படம்: Oscar schwitzt und schwitzt und schwitzt…. by Jorbasa Fotografie with CC license
நிதர்சனத்தை எதார்த்தமாக சொன்னது உங்கள் கதை. வாழ்த்துக்கள்