துள்ளி ஓடும் கன்று
மாட்டுப்பொங்கலும் பொங்கல் பண்டிகையின் ஒர் சாராம்சமாகும்.
குழந்தை பருவ நாட்களில், எங்கள் வீட்டிற்கு எதிரே வசிக்கும் பாட்டி, தாத்தா வளர்க்கும் பசு மாட்டின் பால் தான் வாங்குவோம். அவர்களிடம் இரண்டு சிவலை மாடுகள் மற்றம் காளை இருந்தன. இரண்டு மாடுகளில் ஒன்று கன்றுக்குட்டியைப் பெற்றெடுக்கிறது. அது மிகவும் அழகாக இருந்தது.
அன்று மாட்டு பொங்கலாதலால் , எதிர் வீட்டு தாத்தா அனைத்து மாடுகளையும் ஊர் நடுவில் இருக்கும் ஊருணியில் குளிக்க வைக்க அழைத்துக் கொண்டு சென்றார்.
வாசலில் இருந்து கத்தி அம்மாவிடம் சொல்லிவிட்டு , மாடுகள் பின்னால் நாங்களும் சென்றோம்.
ஊருணியில் தண்ணீரினால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. தண்ணீர் சூரிய ஒளியினால் ஒரு கண்ணாடி போல பிரகாசித்து கொண்டிருந்தது.
தாத்தா வீட்டிலிருந்து எடுத்து சென்ற ஒரு வாளியில் குளத்திலிருந்து தண்ணீரை மோண்டு , வைகோல் வைத்து நன்றாக மாடுகளை தேய்து நன்றாக குளிப்பாட்டினார்.
தண்ணீர் உடம்பில் பட்டதும், மாடுகள் சிலிர்க்க, தண்ணீர் தூரல் போல் எங்கள் மீது பட, நாங்கள் “ஓய்ய்” என்று கத்தி கூச்சலிட, இளங்கன்று சிறிதே மிரண்டு போனது.
பின்பு வீட்டிற்கு திரும்பியதும் மாடுகளின் கொம்பிற்கு வண்ணங்கள் பூசி, சந்தனம் குங்குமம் வைத்து அழங்கறித்தார். கழுத்தில் புது மாலையிட்டு பார்க்க மிகவும் அழகாக இருந்தது. இந்த கலோபரங்கலை கண்ட இளங்கன்று இன்னும் மிரண்டு துள்ளி குதித்து, ம்மா… என்று வாலை விரைத்து கொண்டு ஓடியது.
“ஏலேய் கன்னுகட்டி ஓடுதுடா புடிங்க“ என்று எதிர் வீட்டு தாத்தா கத்த, நாங்கள் “அண்ணே” என்று அழைக்கும் இளவட்டம் இரண்டு பேர் இளங்கன்றை பிடிக்க ஓடினார்கள். நாங்களும் “ ஏய்ய்…” என்று கத்திக் கொண்டு பின்னாலே ஓடினோம்.
ஒரு வழியாக இளங்கன்றை பிடித்து கொண்டு வர, அதற்கும் சந்தனம் குங்குமம் வைத்து, மாலையிட்டு அலங்கரித்தனர்.
எதிர் வீட்டு பாட்டி அதற்குள் பொங்கல் வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்திருந்தார். அனைவரும் சேர்ந்து பொங்கல் வைத்து பின்பு மாடுகளை தடவிக் கொண்டே பொங்கலை உண்டு களித்தோம்.
எங்களை போலவே இளங்கன்றும் இங்கும் அங்கும் துள்ளி துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது.
Leave A Comment