நீங்கள் ஜெர்மனிக்கு புதியவரா, அதுவும் உங்கள் குழந்தை/குழந்தைகளுடன் ? அல்லது, நீங்கள் ஒரு நகர்வைத் திட்டமிடுகிறீர்களா ? புதிய ஊரில் குழந்தை வளர்ப்பு, பள்ளி குறித்த சந்தேகங்கள் இருக்கின்றதா ? எனில் , இது உங்களுக்கானது.
பேசும் மொழி , கலாச்சாரம், தட்ப வெட்ப நிலை, வாழ்க்கை முறை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஜெர்மனி போன்ற ஒரு நாட்டிற்குச் இடம் பெயர்வது மிகுந்த சவால்கள் நிறைந்தது . பள்ளிப்படிப்பு தொடர்பான சந்தேகங்கள் இச்சவால்களை இன்னும் கடினமாக்கலாம் . “எனது பிள்ளை மாற்றங்களுடன் ஒத்துப்போக முடியுமா?”, “எனது பிள்ளை நண்பர்களை உருவாக்க முடியுமா?”, “மொழி சார்ந்த பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியுமா?” போன்ற கேள்விகள் எண்ணற்றதாகும் .
இதுபோன்ற குழப்பங்களை சந்தித்த ஒரு பெற்றோர் என்ற முறையில், எனது இந்த பதிவு சில முக்கிய முடிவுகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று நம்புகிறேன். பொறுமையான தேடலும், செய்தி சேகரிப்பும் இதற்க்கு மிகவும் முக்கியம் . பெரியவர்களாக, நாம் நகர்வை திட்டமிடுகையில் , விசா சம்பிரதாயங்களை நிறைவு செய்தல், ஒரு புதிய நகரில் நமக்குத் தேவையானவற்றை ஷாப்பிங் செய்தல் , பட்ஜெட் திட்டங்கள் மற்றும் சேமிப்பு விவரங்களை எழுதுதல், புதிய வீடு தேடல் போன்ற விஷயங்களை மட்டுமே கருத்தில் கொள்கிறோம் . பட்டியலில் கடைசியாக இடம்பெறுவது பள்ளி சார்ந்த செய்திகள் , ஏனென்றால் “அங்கே போன பிறகு பாத்துக்கலாம்” என்ற அலட்சிய போக்கு. இது சரியான அணுகுமுறை அல்ல.
தேர்வுகள் பற்றி அறிந்து கொள்வது, உங்கள் தேவைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களின் அடிப்படையில் முடிவை எடுப்பது மற்றும் அதை எதிர்கொள்ள மனதளவில் நம்மை தயார் படுத்தி கொள்வது மிகவும் முக்கியம், இதனால் அது நிகழும்போது சவால்களை எதிர் கொள்வது அவ்வளவு கடினமாக இருக்காது .
தேர்வுகள் பற்றிப் பேசும்போது, இங்கு வசிக்கும் தெரிந்த நபரை தொடர்பு கொண்டு செய்திகள் சேகரித்தல் . உங்களை குறிப்பிட்ட வாட்ஸ்அப் / ஃபேஸ்புக் குழுக்கள் அல்லது ஏதோ ஒரு சமூக கக் குழுவின் ஒரு பகுதியாக ஆக்கிக்கொண்டு தேர்வுகளை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் இன்னும் இடம் பெயரவில்லை எனில், கூகுளை தவிர்ப்பது நல்லது. உங்கள் தேடல்களுக்கு கிடைக்கும் பதில்கள் உங்களை மேலும் குழப்பம் அடைய செய்யலாம்.
இந்த கேள்விகளுக்கு பதிலளித்த பிறகு, தேவைகளின் அடிப்படையில் வாய்ப்புகள் என்ன என்பதை , குழந்தையின் வயதுக்கு ஏற்ப விரிவாகப் காண்போம்.
6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்
பள்ளி படிப்பானாது ஆரம்பமாவது இங்கே 6 வயதில் தான்.
முதல் கேள்விக்கான பதில் உங்கள் பிள்ளை ஒரு அரசு / கிராம/கவுன்சில் நடத்தும் ஜெர்மன் பள்ளிக்கு செல்ல வேண்டுமா ? அல்லது இருமொழி பள்ளிக்கா அல்லது ஒரு சர்வதேச பள்ளிக்கா என்பதை தீர்மானிக்க உதவும்.
நீங்கள் ஜெர்மனியில் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு மேல் வசிக்க போவதில்லை என்றால், நிச்சயமாக உங்கள் தேர்வு இருமொழி அல்லது சர்வதேச பள்ளியாக இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் இந்தியாவுக்கு திரும்பி செல்லும் போது குழந்தை ஆங்கிலத்துடன் அந்நியப்படும் வாய்ப்புகள் மிகுதி. (நீங்கள் நினைப்பது போல் உள்ளூர் பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு பாடமாக 4 ஆம் வகுப்பு வரை கற்பிக்கப்பட மாட்டாது ). அதே சமயம், இதற்கு ஓரளவு நிதி சார்ந்த திட்டமிடல் வேண்டும். ஏனெனில் நீங்கள் கல்விக்கு ஒரு கனிசமான தொகையை செலவிட வேண்டும். சில சந்தர்ப்பங்களில், நிறுவனங்கள் ஊழியர்களின் பிள்ளைகளின் கல்வி கட்டணத்திற்கு உதவி செய்கின்றன.
உங்கள் பிள்ளை ஒரு உள்ளூர் பள்ளியில் ஜெர்மன் மொழியில் 3 ஆண்டு கல்வி பயின்ற பின், இந்தியாவில் 4 ஆம் வகுப்பைத் தொடருமாயின் , ஆங்கிலத்தில் "விரிவாக விடையளி" என்பதை எதிர் நோக்கும் சங்கடம் ஏற்படலாம். எனவே எந்த ஒரு முடிவையும் சிந்தித்து எடுப்பது முக்கியமாகிறது.
மறுபுறம், 5 வருடங்களுக்கு மேல் இங்கே வசிக்கும் திட்டம் உங்களுக்கு உள்ளதென்றால் , உள்ளூர் பள்ளி சிறந்த தேர்வாக இருக்கும். அரசு நடத்தும் பள்ளிகளில் கல்வி இலவசம்., ஆனால் ஆரம்ப காலத்தில் மொழி பெரிய சவாலாக இருக்கும். குழந்தைகள் ஆரம்பத்தில் தனிமை படுத்த பட்டவர்களாக உணரலாம். இந்தியாவில் பள்ளிக்கல்வி முறைக்கு பழகிய குழந்தைகளுக்கு இன்னும் கடினமாக இருக்க கூடும். ஆனால், இந்த சிக்கல்களும், அச்சங்களும் சிறிது காலத்திற்குள் மறைந்து விடும் . இருப்பினும் , குழந்தையை ஆதரிக்கவும், உதவவும் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். உங்களைப் போன்ற பிற பெற்றோர்களுடன் பேசுவது மேலும் நம்பிக்கை அளிக்கும்.
உங்கள் பிள்ளை உயர் வகுப்பு (3 வகுப்பிற்கு மேல்) பள்ளிப்படிப்பைத் தொடங்கினால், ஜெர்மன் மொழி பயில கூடுதல் வகுப்புகள் பெற ஏற்பாடுகள் செய்வது மிகவும் முக்கியம். உள்ளூர் பள்ளிகள் ஜெர்மன் மொழி மற்றும் இலக்கண திறன்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கின்றன. பெரும்பாலான பள்ளிகள் ஒருங்கிணைப்பு படிப்புகளை வழங்குகின்றன, ஆனால் அது போதுமானதாக இருக்காது.
4 ஆம் வகுப்பிற்க்கு பிறகு, ஆரம்பப் பள்ளியின் போது அவர்களின் கல்வி , செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் குழந்தைகள் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். அவை “ஜிம்னாசியும் ”, “ரியால்சூல்”, “மிட்டல்சூல்” என்றழைக்கப்படுகிறது .
விண்ணப்ப செயல்முறை
உங்கள் நகரப் பதிவு முடிந்ததும், வரைபடங்களைப் பயன்படுத்தி அருகிலுள்ள “GRUNDSCHULE” ஐக் கண்டறியவும். ஒரு எளிய படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் நீங்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் உங்கள் பிள்ளை 6 வயதை நிறைவு செய்வதை உறுதிசெய்க(1 வகுப்பு குழந்தைக்கு)
பள்ளிக்கு விண்ணப்பித்த கையுடன் (பொதுவாக ஹார்ட் அல்லது மிட்டாக்ஸ்பெட்ராயங் என்று அழைக்கப்படும்) பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கும் விண்ணப்பிக்கவும் . அத்தகைய மையங்களில இருக்கை கிடைப்பது கடினம் என்பது பொதுவான கருத்து. இருப்பினும் விண்ணப்பிப்பதில் எந்தத் தீங்கும் இல்லை. இது உங்கள் குழந்தை மற்ற குழந்தைகளுடன் பள்ளியல்லாத கூடுதல் நேரத்தை செலவிடுவதை உறுதி செய்யும். விரைவாக ஜெர்மன் மொழி பயில உதவும் . உங்கள் குழந்தைகள் எவ்வளவு நேரம் இங்கே செலவழிக்க வேண்டும் என்பதை உங்கள் தேவைக்கேற்ப்ப நீங்கள் தீர்மானிக்கலாம். இத்தகைய பராமரிப்பிற்கு மாதம் 100 முதல் 200 யூரோக்கள் வரை செலவாகும். இதற்கு நிதி திட்டமிடல் தேவைப்படுகிறது.
3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகள்
3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகள் ஜெர்மனியில் கிண்டர் கார்டனுக்குச் செல்கிறார்கள். கிண்டர் கர்டென் செல்வது கட்டாயம் இல்லையெனினும் பரிந்துரைக்கப்படுகிறது. இவை மாநில அல்லது தனியார் கிண்டர் கார்டெனாக இருக்கலாம். மீண்டும், மேலே உள்ள 3 கேள்விகளுக்கான பதில்கள் உங்கள் தேர்வை தீர்மானிக்க உதவும். உங்கள் வசிப்பு சில வருடங்களே எனில் , ஆங்கிலம் பேசப்படும் ஒரு தனியார் அல்லது இருமொழி கிண்டர் கார்டெனை தேர்வுசெய்க. நீங்கள் தேர்வு செய்த இடத்தை பொருத்து மாதத்திற்கு 350 முதல் 600 யூரோக்கள் வரை செலவாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் நீண்ட காலம் வசிப்பதாய் இருந்தால் , அரசு நடத்தும் கிண்டர் கார்டன்கு செல்வதை உறுதிசெய்க. இது ஜெர்மன் மொழி பயில மிகவும் உறுதுணையாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் அரசு பள்ளியில் 1 ஆம் வகுப்பு துவங்கும் போது சங்கடங்கள் இல்லாமல் இருக்கவும் உதவும். ஆங்கிலம் பேசும் கிண்டர் கார்டெனுக்கு கலந்துகொண்ட சென்ற குழந்தைகள் ஜெர்மன் பள்ளியில் ௧ ஆம் வகுப்பு தொடங்கும் போது சற்றே திணற கூடும் . எனவே சிந்தித்து தேர்வு செய்யுங்கள்
5 வயதுக்கு மேற்பட்ட குழந்தை “போற் ஷூல் கிண்ட் ” (அதாவது PRE SCHOOL குழந்தை) என்று அழைக்கப்படுகிறது, இக்குழந்தைகள் ஒருங்கிணைப்பிற்க்காக வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை அரசு பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள்.
கிண்டர் கர்டெனில் உங்களுக்கு இடம் கிடைப்பது உங்கள் குழந்தையின் வயதை பொருத்து மாறலாம். ஆனால் நீண்ட காத்திருப்பு காலம் உண்டு என்பது பொதுவான கருத்து.
3 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
6 மாத வயதிலேயே குழந்தைகள், ஜெர்மனியில் பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப படுகிறார்கள். (கிரிப்பே என்று அழைக்கப்படுகிறது). அவ்வளவு சிறிய குழந்தைகளை , பெரும்பாலான இந்தியர்கள் அத்தகு பராமரிப்பு மையத்திற்கு அனுப்ப விரும்புவதில்லை. ஆனால் வேலை தேவைகள் காரணமாக, நீங்கள் அதைக் கருத்தில் கொண்டால், தனியார் அல்லது அரசால் நடத்தப்படும் ஒரு மையத்தை தேர்வு செய்யலாம். தனியார் மையம் என்றால் சில நூறு ஐரோக்கள் செலவு செய்ய தயாராக இருக்க வேண்டும்.
நீங்கள் தீர்மானிக்கும் குறிப்பிட்ட பகல்நேர பராமரிப்பு மையத்தில் குழந்தை பராமரிப்பு குறித்த மதிப்புரைகளைப் படிக்கவும். குழந்தை பராமரிப்பு ஒரு இடத்திற்கும் மற்றொரு இடத்திற்கும் இடையில் வேறுபடுகிறது. அந்த இடம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கான நிதி உதவி
குழந்தைகளுடன் ஜெர்மனியில் வசிக்கும் எந்தவொரு வரி செலுத்துவோரும் நிதி உதவியைப் பெறலாம். குழந்தைகளை வளர்ப்பதற்கு ஜெர்மன் அரசாங்கம் பெற்றோருக்கு செய்யும் உதவி . குழந்தை 18 வயதாகும் வரை இந்த உதவி தொகை வழங்க படுகிறது.. 2019 ஜனவரியில் தொடங்கி இத்தொகை ஒரு குழந்தைக்கு தலா 204 யூரோ ஆக உயர்த்தப்பட்டது. இந்த உதவிக்கு விண்ணப்பிக்க குழந்தையின் வரி அடையாள எண்( TAX ID) கட்டாயமாகும் என்பதை நினைவில் கொள்க.
கலாச்சார ஒருங்கிணைப்பு
பள்ளிப்படிப்பு பற்றி விரிவாக விவாதித்த பின்னர், சில பொதுவான மாற்ற சிக்கல்களைப் பற்றி விவாதிக்க வேண்டிய நேரம் இது. பெரியோரை விட குழந்தைகள் எளிதாக மாற்றங்களுக்கு பழகி விடுவார்கள். எனினும் அதற்கு பெற்றோர்கள் ஆதரவளிப்பதும் கட்டாயமாகும். கலாச்சார ரீதியாக நடத்தை, விளையாட்டு முறைகள், மொழி, பகிர்வு, உதவி, கற்றல், உணவுப் பழக்கம் போன்ற விஷயங்களில் ஜெர்மன் குழந்தைகளுக்கும் இந்திய குழந்தைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. பெரியவர்களாகிய நாம் , இணக்கத்தை கருதி நம் மக்களுடன் கலக்க முனைகிறோம். ஆனால், உங்கள் குழந்தை இச்சமூக குழந்தைகளுடன் இலகுவாக பழகுவது மிகவும் முக்கியம். சில அடிப்படை கலாச்சார வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளவும் , பள்ளியிலும் மற்ற பொது இடங்களில் கூச்சமின்றி பழக இது ஏதுவாக இருக்கும். உங்கள் பிள்ளை ஒரு குறிப்பிட்ட விளையாட்டையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு செயலை விரும்பினால், அவர்களை அத்தகைய வகுப்புகளில் சேர்க்கவும், ஏனனில் குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கான சிறந்த வழி விளையாடுவதே. இயன்ற வரை பூங்கா, மிதி வண்டி பயிற்சி , நடைபயிற்சி, சூப்பர் மார்க்கெட்டுகள் போன்ற இடங்களுக்கு குழந்தைகளை அடிக்கடி அழைத்து செல்லுங்கள். குழந்தைகள் கவனித்து பலவற்றை எளிதாக கற்றுக்கொள்கிறார்கள். நீங்கள் விளக்கும்போது விஷயங்களை எளிதாக புரிந்துகொள்ள இது அவர்களுக்கு உதவுகிறது
பொதுவாக பயன்படுத்தப்படும் சில முக்கியமான சொற்கள்
கிண்டர் கிரிப்பே: கிண்டர் கிரிப்பே என்ற சொல் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகள் செல்லும் பராமரிப்பு மையத்தை குறிக்கிறது, இதை நம் நாட்டில் “டே கேர் சென்டர் ” என்று அழைக்கிறோம்.
கிண்டர் கார்டன்: கிண்டர் கார்டன் என்ற சொல் 3 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை குறிக்கிறது, நம் நாட்டில் இதை பர்.கே.ஜி., எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி ஆகியவற்றை உள்ளடக்கிய முன்பள்ளி என்று அழைக்கிறோம்
குருண்டுஷூலே: குருண்டுஷூலே என்ற சொல் ஜெர்மனியில் அரசாங்கத்தால் நடத்தப்படும் தொடக்கப் பள்ளிகளை (வகுப்பு 1 முதல் 4 வரை) குறிக்கிறது
ஹார்ட் / மிட்டாக்ஸ்பெட்ரூங்: பள்ளி நேரத்திற்கு பிறகு குழந்தைகள் செல்லும் பராமரிப்பு மையங்கள்.
இரு மொழி பள்ளிகள்: இவை ஜெர்மன் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டையும் பாட மொழியாக கொண்ட பள்ளிகளைக் குறிக்கின்றன. பெரும்பாலான இரு மொழி பள்ளிகள் கிண்டர் கார்டனில் இருந்து தொடங்குகின்றன, எனவே உங்கள் விருப்பம் இதுவாக இருந்தால், தனியாக நீங்கள் கிண்டர் கர்டெனுக்காக தேடி அலைய வேண்டிய தேவை இல்லை.
சர்வதேச பள்ளிகள்: பெயர்க்கேற்றார் போல் ஜெர்மன் தெரியாத அல்லது ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பாத வெளிநாட்டு மாணவர்களுக்கானது இப்பள்ளிகள் . பாட மொழி ஆங்கிலம். இப்பள்ளிகள் பாடம் அல்லாது பல கலை மற்றும் விளையாட்டு பயிற்சி வகுப்புகளை செவ்வனே அளிக்கிறது.
ஜெர்மனியில் பள்ளிப்படிப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய நல்ல புரிதலைப் பெற இது உங்களுக்கு உதவியது என்று நம்புகிறேன். மேலே விளக்கப்பட்டுள்ளபடி, தேவைகளின் அடிப்படையில் உங்கள் தேர்வுகள் இருந்தால் எல்லாம் இலகுவாக அமையும். ஜெர்மனியில் வாழ்க்கை இனிதாய் சிறப்பாய் துவங்க பெற்றோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் . வானுயர பறந்து புகழ் பெற ஏற்ற சிறகினை உங்கள் குழந்தைகளுக்கு வழங்க எண்ணற்ற வாய்ப்புகள் கொடுக்கும் நாடு இது. வாழ்த்துக்கள்!
Leave A Comment