இதயம் பலவீனமானவர்கள் ..கர்ப்பிணி பெண்கள் இந்த பதிவினை படிக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்!

காலம் என் வசம் ஆனால்!!

காலம் மட்டும் என் கைவசம் ஆனால் சற்றே பின்னோக்கி சென்று…
காணி நிலத்தில், ஒரு மாட மாளிகை அமைத்து அதில் கூடவே பத்துப் பதினைந்து தென்னை மரம் நட்டு,
அதனை பாரதிக்கு பரிசளிப்பேன் .
பாரதியும், செல்லம்மாவும் ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் வாழ்வதைக் கண்டு மகிழ்ந்திடுவேன்.
(பாரதியின் காணி நிலம் வேண்டும் என்ற பாடல் தெரிந்தவருக்கு இது  புலப்படும்)
அதே  ஆரோக்கியமும், ஆனந்தமும்
மார்க்ஸ், ஜெனிக்கு கிடைக்க செய்திடுவேன்.  உன் கல்லறையை காண கூட கட்டணம் வசூலிக்கும் காலத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்ற உண்மையை   மார்க்ஸ் -இடம்
வத்தி வைத்து விட்டு வருவேன்.

அகிம்சையை உலகுக்கு நிலைநாட்டிய மகாத்மாவின் மரணம் இயற்கையாகவும், இயல்பாகவும் நடந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஈடேற்ற கோட்சேவின் தோட்டாவின் வேகத்திற்கு என் உயிரைத் தந்து நிற்பேன்.

மின் விளக்கை முதலில் கண்டறிந்தது எடிசன் -ஆ   அல்லது டெஸ்லா-வா  என்ற கேள்விக்கு விடை காணும் வகையில், ஒருவேளை டெஸ்லா- வாக இருந்தால் முதல் காப்புரிமை படிவத்தை டெஸ்லாவின் கையில் தந்து விட்டுச் செல்வேன்!

கொலம்பஸ்-இடம் சென்று நீங்கள் கண்டறிந்தது ஆசியாவின் மறுபகுதியை அல்ல அமெரிக்கா எனும் பெரும் கண்டத்தை என்ற உண்மையை சொல்லி விட்டு வருவேன்!

திருக்குறளில் தேவையற்ற சிறு எழுத்தினை கூட சேர்க்காத வள்ளுவனின் தலைமுடி எப்படி இவ்வளவு நீளம் இருக்கும் என்ற
என் கேள்விக்கான விடையை அறிய
வள்ளுவனுடன் ஒரு செல்பி எடுத்து வருவேன்!

ட்வின் டவர், கும்பகோணம் தீ விபத்து, சுனாமி,  புயல், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்களும், விபத்துக்களும்
வரும்முன் மக்களின் உயிர்காக்க வழி செய்வேன்!

நிர்பயாக்களையும்,
வினோதினிக்களையும்,
நந்தினிக்களையும்,
ஹாசினிக்களையும்  வரும் காலத்திற்கு
அழைத்து வந்து  துள்ளித்திரிந்தாட விடுவேன்!!
பண்டைய கலைகளையும், இயற்கை விவசாயத்தையும், இயற்கை மருத்துவத்தையும் ஆவணப்படுத்தி எடுத்து வந்து புதிய தலைமுறைகளின் கையில் கொடுத்திடுவேன்!!
அப்படியே அப்பல்லோ போய்
பெரிய அம்மா இட்லி சாப்பிட்டதை மறைந்திருந்து பார்த்துவிட்டு வருவேன்!
முன்கூட்டியே வைரஸ், பாக்டீரியா
படிமத்தை எடுத்து வந்து  விஞ்ஞானிகளிடம் கொடுத்து  தடுப்பு மருந்துகளை கண்டறிய  செய்திடுவேன்.
கொரோனாவிற்கும் தீர்வு கிடைத்திருக்கும்!
இப்பொழுது காலத்தின் முன்னோக்கிச்
சென்று…
உலகத்தில் அடுத்து என்னென்ன நடக்க இருக்கிறது என்பதை புள்ளிவிவரமாக பதிவு செய்து  அடுத்த நோஸ்ராடாமஸ் -ஆக  என் பெயரை சரித்திரத்தில்
பொறிக்க செய்வேன்!

படம் : Time Machine by DeLerkim with license