முதல் முதலாக கரும்பு சாப்பிட்டதை மறக்க முடியாது.

பால் பற்கள் பத்து தான் வளர்ந்து இருந்தது. பாட்டி கரும்பு சாப்பிடுவதை பார்த்து எனக்கும் வேண்டும் என்று அடம் பிடித்து அழுதது இப்போ நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.

சிறு வயதில் பாட்டி கரும்பை அரிவாளில் இரண்டாக வெட்டி, கணுக்கள் இல்லாமல், கரும்பின் தோல் சீய்த்து தருவார்கள். அதை அந்த பற்களால் சிறிது சிறிதாக கடித்து, கரும்புச் சாறு  நன்கு கடித்து சாப்பிட தெரியாமல் புது சட்டை பூராவும் கறையாக்கியது தான் மிச்சம்.

சிறிது வளர்ந்த பின் கடிக்கக் கட்டுக் கரும்பு கானாது. ஒரு சான் கரும்பு துண்டு ஒரு அடியாக மாறினாலும், கரும்பு கடிப்பதற்கு பற்கள் வலிப்பதேயில்லை. கரும்பு கடித்து நாவை புண்ணாக்கினாலும் விடாமல் போட்டி போட்டு கரும்பு கடித்தோம்

விட்டால் கரும்பு தோகை கூட கடித்து துப்பி விடுவோம் என்று , அதனை முன்பே வெட்டி விடுவர். அடிக்கரும்பு சாப்பிட போட்டியே நடக்கும். ஒவ்வொருவரும் எவ்வளவு கரும்பு சாப்பிட்டோம் என்று சக்கையிலிருந்தே தெரிந்து விடும்.

பாட்டி சொல்வார்கள், கரும்பு கடிக்கவில்லை என்றால், அடுத்த ஜன்மத்தில் கழுதையாக பிறப்போம் என்று. அது எவ்வளவு உண்மை என்று தெரியாது. கரும்பை, அதன் சுவைக்காவே வரும்பி உண்டோம். பல் போன பாட்டி முதல் பால் பற்கள் பாலகர் வரை கரும்பு ஆட்கொண்டது.

காலங்கள் மாறி,

கல்யாணம் ஆகி,

கரும்பு கானல் நீராகி,

கடல் கடந்து வாழ்ந்தாலும்,

கரும்பின் மீதுள்ள,

காதல் தீர்வதில்லை.

-மாணிக்க மீனாட்சி அன்பழகன்