கணேஷ் தன் நண்பனை சந்திக்க திட்டமிட்ட நேரத்தில் பழமுதிர்சோலைக்கு வந்தான். கண்ணாடியில் பார்த்து தலை சீவி கொண்டான். ஒரு வெள்ளிக்கோடு அவன் நாற்பதை தொட்டதை நினைவூட்டியது. ரமேஷ் வர நேரம் ஆனது. அருகில் இருந்த கோவிலுக்குள் நுழைந்தான் கணேஷ். அங்கே யாரோ பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்.
‘வாழ்க்கை வாழ்வதற்கே. நல்லதும், அல்லதும் அனுபவிப்பதற்கே உடல் தரித்தோம். ‘ அவரின் சொற்கள் காதில் விழுந்தது.
கணேஷ் தரிசனம் முடித்து பிரகாரத்தில் அமர்ந்தான். அந்த சொற்களை அசை போட்டான். அவனின் அப்பா சமீபத்தில் தான் காலம் ஆனார். அவரை நினைத்தான். சில ஆசைகள் நிறைவேறி, பல பயங்கள் நிஜமாகாமல், சில நிராசையும், சில எதிர்பாரா திருப்பங்களும் கண்டு, கையறு நிலையில், வாழ்க்கை முன் மண்டியிட்டு முழுமையாய் ஒப்பு கொடுத்து, அணுவளவு எதிர்ப்பும் இன்றி சரண் அடைவது தான் உச்சமோ ? அந்நிலையில் கருணை பொழியும் என்கிறார் வாழ்வை உணர்ந்த ஞானி. வாழ்வின் முடிவில், மரணம் கருணை அன்றோ?
ஒரு வேளை அந்த உச்சத்தை, ஒருவன் நடு வயதில் அடைந்தால், கருணையின் பொழிவை சில ஆண்டுகள் அனுபவிக்கும் பாக்கியம் பெறுவான்.
கணேஷ் பாக்கியவானா ?
படம்: Peaks by Solarisgirl with license
வாழ்வின் மிக ஆழமான, அடர்த்தியானஉண்மைகளின் பண்பட்ட புரிதலுடன் எழுதப்பட்ட ஒரு படைப்பாக இதை காண்கிறேன். வாழ்த்துக்கள்